நிகாட்டாவில் நடைபெற்ற உலக நிஷிகிகோய் உச்சிமாநாடு 2026 மற்றும் கூல் ஜப்பான் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு
ஜப்பான் வெளிவிவகார அமைச்சு மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இராஜதந்திர ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் 7–8 ஆகிய திகதிகளில் நிகாட்டா மாகாணத்தில் நடைபெற்ற உலக நிஷிகிகோய் உச்சிமாநாடு 2026 மற்றும் கூல் ஜப்பான் கண்காட்சியில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதரகம் பங்கேற்றது.
இவ்விஜயத்தின் போது, இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள், நிகாட்டா மாகாண ஆளுநர் திரு. ஹிடேயோ ஹனாசுமி, நாகோகா நகர முதல்வர் திரு. தட்சுனோபு இசோடா மற்றும் ஓஜியா நகர முதல்வர் திரு. எட்சுவோ மியாசாகி ஆகியோரைச் சந்தித்ததுடன், சாடோ, நாகோகா மற்றும் ஓஜியா நகரங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் உள்ளூர் கூட்டாண்மை ஒத்துழைப்புப் பிரிவின் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்புகள் கலாச்சாரப் பரிமாற்றங்கள், சுற்றுலா மற்றும் பாரம்பரியத் தொழில்களில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கின. குறிப்பாக, நிகாட்டாவின் ஜவுளித் தொழில்துறைக்கும் இலங்கையின் பாரம்பரிய கைத்தறித் துறைக்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நிகாட்டாவின் கலாச்சார மற்றும் விவசாயப் பாரம்பரியத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழும் நிஷிகிகோய் (அலங்காரக் கெண்டை மீன்) இனத்தின் சர்வதேச மேம்பாட்டையும் இவ்விஜயம் எடுத்துக்காட்டியது.
கூல் ஜப்பான் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பொருட்கள் ஊடாக இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் சுற்றுலாத் தலங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்குத் தூதரகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் பிராந்தியப் பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.
