டோக்கியோ, சைதாமா, நகோயா, ஒசாக்கா மற்றும் சிபா ஆகிய நகரங்களில் நடாத்தப்பட்ட "இலங்கை மனித வள மேம்பாட்டுத் திட்டம் – ஜப்பான் 2026" (Sri Lanka Human Resources Promotion Programme – Japan 2026) வெற்றிகரமாக நிறைவுற்றதை ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
ஒவ்வொரு நிகழ்விடத்திலும் கருத்தரங்கு மண்டபங்கள் நிரம்பி வழியும் வகையில், ஜப்பானிய வணிகச் சமூகத்திடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பு மெய்யாகவே ஊக்கமளிப்பதாக அமைந்தது. இலங்கைத் திறமையாளர்களைப் பணியமர்த்துவதில் ஜப்பானிய நிறுவனங்கள் காட்டிய தீவிர ஆர்வம், திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட மனித வளங்களின் நம்பகமான ஆதாரமாக இலங்கை பெற்றுவரும் அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கிறது.
இத்திட்டம், இலங்கைப் பணியாளர்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும், ஜப்பானின் மனித வளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கையை ஒரு நம்பகமான பங்காளியாக வெளிப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த தளத்தை வழங்கியது.
23 இலங்கை அனுப்புநர் அமைப்புகள் 250-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ஆட்சேர்ப்புப் பங்கான்மைகளுக்கான புதிய பாதைகளைத் திறந்துவிட்ட B2B வணிக வலைப்பின்னல் அமர்வுகள் இத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகும்.
ஜப்பானில் இத்தகைய பாணியில் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய மனித வள மேம்பாட்டு முயற்சியான இத்திட்டம், நெறிமுறை சார்ந்த மற்றும் சட்டப்பூர்வமான ஆட்சேர்ப்பை ஊக்குவிக்கவும், முறைகேடுகளைக் குறைக்கவும், ஜப்பானில் இலங்கையர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
இந்த முயற்சியை மிகப்பெரும் வெற்றியாக மாற்றிய அனைத்து ஜப்பானிய நிறுவனங்களுக்கும், இலங்கை அனுப்புநர் அமைப்புகளுக்கும், பங்காளிகளான நிறுவனங்களுக்கும் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
